Search This Blog

Monday, December 23, 2013

"திருஅருட்பா வரலாறு - 1 " - தொழுவூர் வேலாயுத முதலியார்

தயவு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

"திருஅருட்பா வரலாறு" -
சன்மார்க்க சங்கச் சாதுக்களின் வேண்டுகோளின் படி
வள்ளற் பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் இயற்றப்பட்டு
"திருவருட்பிரகாச வள்ளற்பெருமானின்ஒப்புதலின் படி
திருஅருட்பா முதல் பதிப்பில் பதிப்பிக்கப்பட்டது "

உரை : வடலூர் . புலவர். சீனி. சட்டையப்பனார்


வெளியீடு :
வள்ளலார் இளைஞர் மன்றம் - கோட்டக்கரை - வடலூர்
வள்ளலார் குடில் - விருத்தாசலம். 
வள்ளலார் பெருவெளி இணையதளக் குழுவினர் - நியூ ஜெர்சி - அமெரிக்கா

 ======


காப்பு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

ஒருகோட்டுச் சிவகளிற்றை உம்பர்சிறை ஒழித்தொளிர் வைஞ்ஞாங்கர் ஏந்தித்
திருகோட்டு நம்பியைஆ ளுடையானை உடையாளைச் செல்வக் காழி
வருகோட்டு மாமருந்தை வாகீச அமுதைவன் தொண்ட வாழ்வை
மருகோட்டு வயல்வாத வூரரசைத் தண்டிதனை வழுத்தல் செய்வாம்.   (1)

உரை:

அருள் ஆற்றல் என்னும் ஒற்றைக் கொம்பினை உடைய சிவ கணபதியை, வான நாட்டவரின் சிறைவாசத்தை ஒழித்தது அருள்ஒளி வீசும் மெய்ஞ்ஞான வேலினைத் திருக்கரத்தில் ஏந்தித் திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் சிவசண்முகச்சிவதேசிகனை, உயிர் குலங்களை எல்லாம் ஆட்கொண்டு அருள் பாலிக்கும் சிவ பரம்பொருளை, எல்லா உயிர்களையும்இன்புறச் செயல்படும் சிவ சக்தியை, அருட்செல்வம் கொழிக்கும் சீர்காழியில் அவதரித்த அருள் மாமலையாகி மெய்ஞானமருந்தாகும் திருஞானசம்பந்தச் சற்குருவை, சொல்லுக்கு இறைவராகிய அருள் அமுதமாய்த் திகழும் திருநாவுக்கரசரை, வன்தொண்டர் என அருட்பெயரைத் தரித்துநட்புரிமையை விளக்கும் அருள் வாழ்வினராம் சுந்தர மூர்த்தியை, மலம் மாயைகளை ஓட்டுகின்ற ஆற்றலும், சிவகதி என்னும்பயிரை விளைவிக்கும் வல்லபமும் உடைய அருள் வயல்களைச் சூழ்ந்தத் திருவாத வூரராம் மாணிக்க வாசக மன்னரை, அறப்பயன்களையும் வழிபாட்டுப் பயன்களையும் நல்கி அருளும் சண்டேச்சுரனை நாம் நாளும் போற்றிப் புகழ்ந்திடும் செயலைமேற்கொள்வோம்.   


 ======


குரு தோத்திரம்
எண்சீரடி ஆசிரிய விருத்தம்

சோமசிங் காரநம! தூயசந் தோடநம!
சூழுறும் வேதமுடி சூடரும் பாதநம!
காமசங் காரநம! காதலன் பாருமவர்
காதலின் காறுமமர் காசினன் பாதநம!
நாமமங் கோதினர்கள் நாசமின் றாகியுப
நாடரும் வீடுதரு ஞானசெம் பாதநம!
இராமிபங் காளநம! நானுயும் வாறுவரு
இராமலிங் காயநம! இராமலிங் காயநம! (1)

உரை:

இளம் பிறையைச் சூடிய எழிற்கடவுளே போற்றி ; தூய பேரின்பத்தை வழங்கி அருட்பவரே போற்றி; சுத்த வேதாந்தந்தின்முடியில் பொருந்துவதற்கு அரிதாகிய அருள்வெளி, அருள் ஒளி என்னும் திருவடிகளை உடையவரே போற்றி; காம வெகுளிமயக்கங்களை ஆன்மாவிலிருந்தும் முற்றிலும் அகற்றுபவரே போற்றி; அடிமை நேயம், மகன்மை நேயம், நண்பினர் நேயம், எவ்வுயிரும் தம் உயிராகப் பாராட்டும் சன்மார்க்க நேயம், பழகுகின்றவர்க்குப் பழகுகின்ற அளவு அருள் ஒளி, வழங்கும்செவ்விய திருவடிகளை உடையவரே போற்றி ;

இராமலிங்காய நம என்னும் அருட்பெயரை இடையறாது ஒதிவருகின்றவர்களுக்கு என்றும் அழியாத மேலான மோட்ச இன்பப்பேற்றினைத் தந்தருளுகின்ற செவ்விய மெய்ஞானத் திருவடிகளை உடையவரே போற்றி; அருட்சக்தியை ஒரு பாகமாகக்கொண்டவரே போற்றி;
ஏழை எளியவனும் ஆகிய யானும் மேம்படுமாறு அருள் வழங்க முந்துகின்ற இராமலிங்கரே போற்றி! இராமலிங்கரே போற்றி!

 ======

பராபரம் கோதகலும் அநாமயம் போதநிலை
பகாநலம் வதமாறு சுகோதயம் பாதிதமில்
நிராமயங் காரகம திலாதசஞ் சீவிதநல்
நிராசைகொண் டாருடைய நிகேதனஞ் சூதமுறல்
வராதஇன் பாரவெனை முனாளில்வந் தேயருளி
மகாபலஞ் சேரவருள் விராவுசெம் பாதநம!
இராமலிந் தார்மனதின் இராதசந் தோடநம!
*இராமலிங் காயநம! இராமலிங் காயநம! (2)

*இராமல் - இங்கு - ஆய - நம என்று பிரித்துப் பொருள் கொள்க.   

உரை:

எல்லாம் வல்ல இராமலிங்கராம் இறைவனின் திருவடிகள் பரசிவ நிலையிலும் மேலாயப் பராபரம் என்னும் தகுதிப்பட்டினைஉடையது, மனமாயை முதலியவைகள் முற்றிலும் அகன்ற சுத்த அன்மாக்களால் இடையறாது சூழப்பட்டது தற்போதம், ஆணவம் என்னும் இருள் நிலைப் பேறுகளால் சிறிதும் தெரிந்திட இயலாத தூய அருள் நலமே வடிவானது, பிறவிப் பிணிகள், மாயை நிலைகள் முற்றிலும் அற்றுப்போன பேரின்பத்தை உடையது.   இம்மி அளவும் அலைவிலாத உத்தம ஆன்ம வடிவானது, ஏக தேசத்திலும் இருள் நிலை சிறிதும் இல்லாத சிரஞ்சீவியான ஆன்மத் தன்மை உடையது.   

பற்றற்ற தூய சீலர்களுக்குரிய வாழ்விடமானது.   இருள் சூழ்ந்திடுதல் இல்லாத மேலான இன்பத்தைப் பெற்றுக்கொள்ளஎன்னிடம் இளம்பிராயத்தில் எழுந்தருளி ஐந்தொழில் கர்த்தர்களும் அறிய ஒண்ணாத ஞான வலியினை எளியேன் அடையும்படி கருணை பாலித்தது.   அத்தகைய செவ்விய சீர்மைகளைக் கொண்ட திருவடிகளை உடையவரே போற்றி ! வினை, மதம், மலம், மாயை முதலான இருள் நிலைகள் நிறைந்தவரின் மனத்தகத்தே விளங்காத பேரின்பசீலரே போற்றி! விண்ணுலக இன்பத்தைமண்ணுலகினரும் அடையத் திருவடிவு கொண்டு இங்கு எழுந்தருளிய இராமலிங்கரே போற்றி ! ஆன்மாக்களின் பஞ்சமாபாதகங்களையும் அகற்றி அருள் பாலிக்கும் இராமலிங்கரே போற்றி !


                                                                      ======

அறுசீரடி ஆசிரிய விருத்தம்

அவை அடக்கம்

சொல்லத் துணிந்துவிட்டேன்

தன்நிகரும் பெருங்கருணை அருட்பிரகா சப்பெருமான் சந்நி தானம்
மன்அருளை விழைஅன்பர் சிலர்அருட்பா வரலாறும் மற்றும் ஈண்டிந்
நன்னிதிதான் வெளிவந்த வாருஉரைக் குதிஎன்ன நகைநா ணாதிங்
கென்அறியா மையைவிரிப்பேன் இயைந்தனன்உய் வுண்டாஎன் இச்சையாலே .   (1)

உரை:

தனக்குத் தானே இணையானவர் தனிப்பெருங்கருணை வள்ளலாகிய திருவருட்பிரகாசர்.   அவ்வள்ளற் பெருமானின் தெய்வத் திருச்சமூகத்தில் நிலைபேறுடைய பேரருளை அடைய விரும்பினர் சில அன்பர்கள்.  அத்தகைய அன்பர்கள் "திருவருட்பாவின் சரித்திரத்தினையும்,  மேலாம் அருட் கருவூலமாகிய திருவருட்பா வெளிவந்தநடைமுறைகளையும் வெளிபடுத்திட வேண்டும் , ஆதலின் அதுபற்றி உரைத்திடுக" என்று தெரிவித்திடார்கள்,

அதற்கு உடன்பட்டு ஆன்றோரும், சான்றோரும் சூழ்ந்தச் சன்மார்க்க சங்கத்தினரின் சிரிப்புக்கு ஆளானேன் ; மேலும் நான்வெட்கப்படாதவனும் ஆனேன், அத்துடன் அன்றி இவ்விடத்து என் அறியாமையை விளக்குவதற்கும் விரும்பிவிட்டேன்.   அப்படியாகிலும் எனக்கு மேம்பாடு கிடைக்கும் என்ற நல்விருப்பத்தாலே திருவருட்பா வரலாற்றைச் சொல்லத்துணிந்துவிட்டேன்.   


                                                                  ======


நூல்
சோழநாடு

(சோழ நாட்டின் பெருமை )

மணிகொழிக்குங் கல்லோல மாக்கடலை முகந்துண்டு
பிணிதவிர்க்கத் தலைப்பெயலும் பெய்யாத காலத்தும்
தணிவில்வளந் தருபொன்னித் தடம்புனல்சூழ்ந் தகன்கடைவாய்
மணிமுழக்கங் கேட்டறியா வளநாடு சோணாட்டில்.   (1)

உரை:

நவமணிகளைக் கரையில் ஒதுக்குவது கடல், அதன் தன்மையோ ஓலமிட்ட படியே இருப்பது.   அதன் நீரினை வாரி உண்டு, வானமண்டலத்து எழுவன முகில்கள்; அம்முகிற் கூட்டங்கள் மழை பொழிவதால், பலவகைப்பிணிகள் நீங்குகின்றன; அம்முகில்கள்மழை பொழியத் தவறிய காலத்திலும் கூடக் குறையாத வளத்தினைத் தருவது பொன்னி ஆறு!

அப்பொன்னி ஆற்றினால் நீர்வளம், நிலவளம், குடிவளம் நிறைந்தது சோழவள நாடு.   அந்த நாடோ குடிகளின் குறைகளைக்கேட்டு நீதி வழங்கும் ஆராய்ச்சி மணியினது ஓசையைக் கேளாத பெருமை வாய்ந்தது.   அந்நாட்டின் ஒரு பகுதியே தில்லையம்பதி.   


                                                                      ======

 திருத்தில்லை

(அருட்பொதுவின் அருமை)

நீர்பூத்தப் பிறைக்கொழுந்து நின்றவிர்செஞ் சடைக்காட்டின்
ஏர்பூத்த பவளமலை இமையம் அருள் பசுங்கொடியும்
நார்பூத்த பன்னகமும் அடுபுலியும் நலன் ஓங்கச்
சீர்பூத்த பொதுஉடைய திருத்தில்லைப் பதிஒருசார்.   (2)

உரை:
குளிர்ச்சியே நிறைந்த இளம்பிறை, செஞ்சடைக் காட்டில் விளங்குகின்றது, அச்செஞ்சடைக் காட்டினை முடியில் தாங்கி அழகுஒளிரும் பவள மலையாய் ஓங்கி நிற்பவர் தில்லை அம்பலவர், அவருடன் விளங்குபவர் அருட்பசுங் கொடியாம் சிவகாமவள்ளி, அவ்வம்மை அப்பரால் அருள் நலம் ஓங்கப் பெற்றவர்கள் பதஞ்சலியும் புலிக்கால் முனிவரும், அத்தகைய திருவருட் சீர்மைமலர்ந்திருக்கும் இடமே தில்லை அருட்பொதுவாம் சிதம்பரம்.   



                                                                    ======


தெய்வ மருதூர்

(தெய்வ மருதூரின் சீர்மை)

ஐந்திணைசேர் அகத்தமிழின் துறைநுகர்ந்து புறத்துறையின்
வந்தபொருள் அவைகொண்டு செய்வனசெய் மாண்பினவாம்
நந்தல்இலா ஆக்கத்து நாற்குடியும் தழைத்தோங்கும்
கொந்தவிழ்ப்பூந் தண்மருதக் குலமருதூரா மருதூர்.   (3)

உரை:

அத்தில்லையம் பதியின் அணித்தாய் ஒரு பக்கத்தே திகழ்வது தெய்வத் திருமருதூர்.   அவ்வூர் மருதநிலத்திலேயே தலைசிறந்தகுல மருதூர் எனப்படும் மேன்மையினை உடையது, அவ்வூரினர் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னும்அன்பின் வழித்தாயத் தமிழின் அகப்பொருள் இன்பங்களைத் துய்ப்பவர்கள்.   

மேலும் தமிழின் புறப்பொருள் துறைகள் வகுத்தபடி நல்வழியில் ஈட்டிய பொருள் செல்வமும் உடையவர்கள்.  அப்பொருளினைக் கொண்டு செய்யத்தக்க நற்செயல்களைச் செய்யும் மாண்பினையும் உடையவர்கள்.   அத்துடன் எக்காலத்தும் குறைவில்லாத ஆக்கத்தினையும் பெற்றவர்கள், மற்றும் அரசியல், கலையியல், வணிகவியல்உழவியல் என்னும் நால்வகைக் குடிமை இயல்புகளாலும் தழைத்து மேம்பட்டவர்கள்.   


                                                                   ======


 பெற்றோர்

(இல்லறத்தோர் இனிமை)

இராமையன் மருவாமை இராமைய னிராமையன்
அராமுடிப்பூ மணந்தபுகழ் அருங்கருணீ கக்குலத்தோன்
பராவுவட மீன்கற்பிற் சின்னம்மை சின்னம்மைப்
பொராவண்ணந் துணைகொண்டு பொதுநீக்கி அறம்புரந்தான்.   (4)

உரை:

திருமருதூரில் இராமையா என்னும் ஆன்றோர் ஒருவர் இருந்தார்.   அவரோ இராமபிரானே எனப் போற்றத் தக்கவர்.   இருள்என்னும் அறியாமையும், மருள் என்னும் மயக்கமும் சேரப்பெறாதவர்.   பூமண்டலம் புகழத்தக்க கருணீகர் குலவிளக்காயத்திகழ்ந்தவர்.   

அவர்தம் ஒப்பற்ற மனைவியே ஞானாம்பாள் எனத்தகும் சின்னம்மை.  அவரோ வணங்குதற்குரிய வடமீனாகிய அருந்ததி போன்று கற்புடைமை பூண்டவர்.   அத்தகைய கற்பின் கொழுந்துடன் இணைந்து இல்லற நெறிகளை இனிதே போற்றி வந்தார் இராமையா.   அதுவும் அவ்வில்லறநெறிகளுக்குத் தாமே தலைமையாளர் என்னும் படி வாழ்ந்து வந்தார்.   


                                                                        ======


 (கைலை மலை என வாழ்ந்தனர்)

தூய்மையால் உயர்தவத்தால் துருவம்உறீஇ இருத்தலினான்
வாய்மையால் வடகைலை எனஓங்கி வாழ்நாளில்
சேய்மையாத் தனைப்பிரிந்திங் கெமைத்தெரியாச் சிறியோமை
நோய்மைஓ வுறவண்மை இன்பத்து நுழைவிப்பான்.   (5)

உரை:

முன்பு துன்மார்க்கத்தில் பழகினோம், அதனால் கடவுள் சமூகத்தை விட்டுப் பிரிந்தோம்.   அத்துடன் பல பிறவிகளை அடைந்துஅல்லல் உற்றோம், அத்தகைய சிறுமை வாய்ந்த நமது பிறவித் தளைகள் ஓய்ந்திட வேண்டும், மேலும் நம்மை எல்லாம் பேரின்ப பெருவாழ்வில் சேர்த்திடவும் வேண்டும்.   

அதன் காரணமாக இல்லறத்தால் ஓங்கிய தவ நெறி; உள்ளும் புறமும் ஒத்து வாழ்ந்திருக்கும் புனித நிலை; அதனால் துருவநட்சத்திரம் போன்ற நிலைபெற்ற புகழுடன் விளங்கும் மாட்சிமை; இப்படிச் சின்னம்மையும், இராமையாவும் மனத்தொருவாய்மை மொழிந்து வாழ்ந்தனர், அதனால் கைலை மலை போல் புண்ணியம் நிறைந்து விளங்கும் காலம் சூழ்ந்தது.   


                                                                      ======

 அவதார நோக்கம்

(அவதார காலம் நெருங்கியது)

மறைவிளங்க ஆகமவாய் மைகள்விளங்கச் சைவநெறித்
துறைவிளங்க வடகலையுந் தென்தமிழுந் துணிபொருளின்
நிறைவிளங்க நீடுயிர்கள் நெறிவிளங்க நிலைவிளங்கப்
பொறைவிளங்க பொய்புகுதா தேழையோம் புலம்விளங்க.   (6)

உரை:

வேத நெறி ஆகமநெறி உண்மைகள் விளங்கிட வேண்டும், அதன் முடிவான அன்பு நெறியாம் சிவநெறி விளங்கிட வேண்டும், அதன் வழி தாய் மொழியாம் ஆரியமும், தந்தை மொழியாம் தமிழும் உறுதி எனத் துணிந்த அருளின் நிறை நிலையம் இதுவேஎனத் தெளிதல் வேண்டும்.   

நீளும் உயித்தொகுதிகளின் காருண்யா நெறியும் விளங்குதல் வேண்டும், அதன் வழி அருட்பெரு நிலை தழைத்திடவும்வேண்டும், அத்துடன் பல்வகைச் சமய, மத இன வேற்றுமைகள் இடையே சகித்தல் பண்பும் ஓங்குதல் வேண்டும், ஆதலின்ஆருயிர்கள் பொய் நெறிப் புகுந்திடாமல் மெய்நெறிப் புகுதல் வேண்டும், அதன் காரணமாக அருட்கதிரவன் ஒன்று அவதாரம்செய்யக் கூடிய காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.   


                                                                ======


(கருணை வெள்ளம் பெருகுகின்றது )

விடையுகைக்குந் தான்தோன்றி விரித்துக்காட் டியாமெய்மை
நடையுகக்கக் காட்டியுங்கா ணார்காண நாலாம்பொய்க்
கடையுகத்திற் கண்கூடாய் நிலைகாட்டப் பெருங்கருணை
மடையுடைந்து மயற்கட்டின் மயங்காமே வெளிகாட்டி.   (7)

உரை:

தயவின் அடையாளாமாக விளங்குவது எருது, அதன் மீது ஊர்ந்து அருள்பவர் சுயம்புவாகிய ஆண்டவர், அவரால்வெளிப்பட்டதே சத்திய நெறி என்னும் சன்மார்க்கம், அச்சன்மார்க்க நெறிகளைக் கடைப்பிடித்து உய்யுங்கள் என்று அருளிய அருட்குறிப்பினைப் பின்பற்றாதவர்களாய் ஆனோம், அப்படிப் பின்பற்றாதவர்களாய் ஆனா நாம் அனைவரும் காணும்படி ஓர் அற்புதம் நிகழ்ந்திடும் காலம் உருவாயிற்று.   

நான்காவது பொய்யுகமே கலியுகம், அக்கலியுகத்திலும் கூடக் கடவுள் தானாகி விளங்கும் ஓரு நிகழ்வு நிகழ்ந்திடலாயிற்று.   அப்படிப்பட்ட ஒப்பற்றப் பேற்றினை அனைவரும் கண் கூடாகக் கண்டிடும் காலம் உருவாயிற்று.   

அதன் காரணமாக அருட்பிரகாசப் பெருமானின் தனிப்பெருங்கருணை வெள்ளம் பெருக்கெடுத்தது.   அவ்வெள்ளமோ உயிர்குலத்தின் ஆசாரச் சங்கற்ப விகற்பத் தடைகளை உடைத்து எரிந்தது, மேலும் அந்த வெள்ளமே மாயை முதலிய கானகத்தில்உயிர்குலங்கள் அகப்பட்டுத் தகைக்காமல் அடித்துச் சென்றது.   பேரின்பச் சுகம் அடையும்படி உயிர் தொகுதியை அவ்வெள்ளம் கரை சேர்த்தது.   


                                                                      ======

 (திருவுளம் கொண்டிடுதல்)

அறங்காட்டுந் துறைகாட்டி அறுசமயத் தவரவர்க்குய்
திறங்கட்டிச் சிவங்காட்டிச் சித்திமுத்தித் திருக்காட்டிப்
புறங்காட்டிற் பொய்யுடலை வையாமெய்ப் புலங்காட்டி
மறங்காட்டேன் மனக்காட்டை வளராமே மதிகாட்ட.   (8)

உரை:

அறங்கள் முப்பத்திரெண்டு ஆகும், அவற்றுள் தலைமையான அறம் அற்றார் அழிபசி நீக்குதலே! அத்தனி அறத்தினைவெளிப்படுத்தவும், அந்த அறத்தில் இலட்சியம் வைக்காத அகப்புறச் சமயங்கள் அடைகின்ற அனுபவம் சிறியதே என்பதனைவெளிப்படுத்தவும், அவர்களால் முடிவாக அனுபவிக்க வேண்டியது சிவநிலை ஒன்றே என்பதனை வெளிப்படுத்தவும், அச்சிவபரம்பொருளால் அடைகின்ற முன் சாதனம் முத்தி; முடிவு நிலை சித்தி என்பதனை வெளிப்படுத்தவும், அவ்வாறே முத்தி சித்திகளை முறையே அடையப் பெற்றால், பொய் நிறைந்த பூத உடலை இடுகாட்டில் அடக்கம் செய்விக்காமல் மரணமிலாப்பெரு வாழ்வில் வாழ்ந்திட முடியும் என்பதனை வெளிப்படுத்தவும், இத்தகைய அற்புதங்களை எல்லாம் வெளிபடுத்தவும், இத்தகைய அற்புதங்களை எல்லாம் கண்டும், கேட்டும் ஒரு சிறிதும் மாற்றம் அடையாத நமது மனக்காட்டினை மேலும் வளரவிடாமல் அழித்திட வேண்டும் என்றே திருவருட்பிரகாசப் பெருமான் திருவுளங் கொண்டார்கள்.   

                                                                 ======

 (நாத்திகர்க்கும் அன்பு செய்தல்)

தவநெறியுந் தவப்பயனுஞ் சார்பும்சார் புணர்பொருளுஞ்
சிவனருளும் அருட்பயனுந் தேர்ந்தனர்தேர்ந் ததும்உணரா
தவநெறியிற் புக்குழன்றங் கசதிஆ டுறூம் அறிவில்
பவநெறிநாத் திகரும்உயப் பரிந்தருளின் இயல்காட்டி.   (9)

உரை:

நமக்கு உண்டாகிற துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுதலும், உயிர்க்குலத்திற்கு எவ்வகையிலும் துன்பம் செய்யாமல்இருத்தலுமே தவநெறி.   அத்தவ நெறியைக் கடைப்பிடித்து உய்வதற்கு என்று கிடைத்த மானுட தேகமே தவப்பயன்.   அம்மானுட தேகத்தைக் கொண்டு நல்லோர் கூட்டுறவை பெறுதலே சார்புநிலை.   அந்நல்லோர் கூட்டுறவால் உணரப்படுவதேமெய்ப்பொருள்.   

அம்மெய்ப்பொருளை உணர்வதற்கு என்றே இறைவன் உடல், கருவி, உலகம், இன்பம், ஆகியவற்றை அருளியுள்ளார்.  அவ்விறைவனிடம் அகலாது ஒளிர்வதுவே அருள், அதனை எவ்வகை முயற்சியாலாவது நாம் அடைதல் வேண்டும், அடைந்துஎன்றும் அழியாமையைப் பெற்று ஆண்டவனாகவும் விளங்குதல் வேண்டும்.   அதுவே அருளின் பயன், அப்பயனை இம்மானுடப் பிறவியிலேயே அடைந்து விடுதலே நன்முயற்சி.  அம்முயற்சியில் மேம்பட்டவர்களே அருளாளர்கள்.   

அவர்கள் வாழ்வியலை உள்ளபடியே அறிதல் வேண்டும், அவ்வாறு அறியாமல் புல்லிய நெறியில் புகுதல் கூடாது, அத்துடன்அவர்களது வாழ்வியலை சொல் சோர்வுபடப் பேசுதல் தகாது.   அப்படிப் பேசுகின்றவரே நாத்திகர், அப்படிப் பேசி பிறப்பினை அடைய இருக்கின்ற நாத்திகரும் கூட உய்ந்து மேம்பட வேண்டும், அவ்வாறு நாத்திகரிடத்தும் பரிவு காட்டிட , அன்பு காட்டிடவிழைந்தருளினார்கள் வள்ளற்பெருமான்.   

                                                                      ======


(உதயம் செய்திட உவந்தமை)

சன்மார்க்கத் தவர்யாருந் தனிவிரும்பும் நிலைவிரும்பும்
பன்மார்க்கத் தவர்யாரும் பற்றும் ஒரு பற்றாகி
என்மார்க்கத் தவர்களுநா டரியபழம் பொருள்எளியேன்
துன்மார்க்கத் தவம்போக்கித் தவமாக்கத் துணிந்தருளி.   (10)

உரை:

சமய சன்மார்க்கம் - மதச் சன்மார்க்கம் - சமரச சுத்த சன்மர்க்கம் - சமரச சுத்த சத்திய சன்மர்க்கம் ஆகிய சன்மர்க்க  நெறிகளில் பழகும் எல்லாரும் மிகவும் விரும்பும் நிலை ஒப்பற்ற நிலை பெற்றவர் நம் பெருமான். அத்துடன் அத்தகைய பேற்றினை நாமும் அடைந்திட நேர்ந்திடாதோ என்று விரும்புகின்ற வேறுவகை மார்க்கத்தினரும் கூடவிரும்புகின்ற தனி நிலை பெற்றவர்கள் நம் வள்ளல் பெருமான். ஆனாலும் எத்தகைய மார்க்கத்தில் பழகுவோராயினும் எய்திட இயலாத முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள்நம் பெருமான். 

ஏழ்மையராகிய நாம் துன்மார்க்கத்தில் பழகும் நிலையைப் போக்கவும், உயிர் இரக்கம் ஒன்றே உய்ந்திடும் நிலை என்பதைஉருவக்கவும் நம் பெருமான் திருஅவதாரம் செய்ய உள்ளம்

உவந்து அருளினார்கள்.   

No comments:

Post a Comment