Search This Blog

Monday, July 21, 2014

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது சன்மார்க்க சங்கத்தை அபிமானித்த பொன்னம்மாள் அம்மையார் பாடிய வள்ளலார் கீர்த்தனைகள் .

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது சன்மார்க்க சங்கத்தை அபிமானித்த பொன்னம்மாள் அம்மையார் பாடிய 
வள்ளலார் கீர்த்தனைகள் .



கீர்த்தனைகள்
அருட்பெருஞ்ஜோதி
இராகம் - மத்யமாவதி - ரூபக தாளம்
பல்லவி:
வாருங்கள் வாருங்கள் என் சகோதரப் பெண்களே

வந்து சற்சங்கஞ் சேருங்கள்.
அனுபல்லவி:
சன்மார்க்க சுத்த ஷடாந்த ஞானச் சங்கமது

நன்மார்க்கம் நித்த மோங்கி வளர்ந்து பெருகிப் பொங்கிடவே . (வாருங்கள்)

சரணங்கள்
அங்கம் குளிர்ந்துமே திருவருட் கொடி வளர்த்தியே
தங்கத் திருமேனியாகி யெங்கும் பிரக்யாதிபெற்றுப்
பொங்கிக் கனிந்துள்ளம் போற்றி சயசய வென்று
நங்கள் இராமலிங்க சுவாமியாந் திருநாத ரடிவணங்க. (வாருங்கள்)
இருள்தனை யோட்டியே யெங்குந்திரு விளக்கேற்றியே
மருளெனும் மாயா மயக்கத்தை நீக்கியேதிரு
வருளெனும் பராசத்தித் திருக் கொடியினை வளர்த்தியே
அருட்பெருஞ் ஜோதிக்கனியை யுண்டானந்தம் பொங்கவே. (வாருங்கள்)
தடைகளைத் தீருங்கள் முற்றுந் தனிப்பெருங் கருணைக்குள் ளாகுங்கள் மாயா
படைகளை யோட்டுங்கள் நம்பாச பந்ததத்தை யகற்றுங்க ளருள் ஞானக்
கொடையினை நாட்டுங்கள் குணாதீதனான திருக்குமரனடி சாரநின்
னடையினைப் பழகுங்கள் நம் இராமலிங்க சுவாமியை நாடுங்கள். (வாருங்கள்)
மருட்பாலை விரும்பாதீர்க ளுலகமும்மல மயக்கத்தில் வீழாதீர்க ளஞ்ஞான
விருட்பாலைக் குடியாதீர்க ளிருவினையி லுழலாதீர்கள் மெய்ஞ்ஞானப்
பொருட்பாலை யுண்டுபரிபூரணத்தி லமரவே திருவருட்பிரகாச வள்ளலருளியதிரு
அருட்பாவை நடோறும் போற்றி வளர்த்திப் பக்தியாய்ப் பாடிடவே. (வாருங்கள்)
ஜாதிபேதமத மென்பதிங் கொன்றுமிலை யித்தடைகள் நமக்குள்
ஆதிகாலத்தி லணுவளவுமிலை யப்படி யிருக்கினும் ஞானம்
போதிப்பதினிலே யிப்பேதங்க ளிலையென வெல்லோரு மெச்சமய
ஜாதியிலுள்ளோரும் வந்துசார்ந்த சுத்தசன்மார்க்கத்தை வளர்த்துங்கள். (வாருங்கள்)

                                                       ===================
அருட்பாவின் பெருமை
இராகம் - சஹானா - ரூபக தாளம்
பல்லவி:
அருட்பாவின் பெருமையை யாராலே சொல்லலாகும் திரு

அருட்பாவின் பெருமையை யாராலே சொல்லலாகும்.
அனுபல்லவி:
மூவேழுலகத்தி லுள்ளோர்களெலா மொன்றுகூடித் திரு

நாவாலேயுரைத்தாலுமுரைக்கலாகுமோ வதன்பெருமையைத் திரு.
சரணங்கள்:
தில்லைபல வாணந்திரு நடனமாடியாடி நம்வள்ளல் நெஞ்சங்
கல்லைப் போலுரைத்திருக்குங் கரணங்களை யுருக்கி யுருக்கித்
தொல்லைவல் வினைகளைத் தூரவிரட்டியோட்டி வாட்டி வாட்டி
எல்லையில்லா வானந்த மளித்தெடுத்துரை செய்தருளிய திரு. (அருட்பாவின்)
அருட்பெருஞ் ஜோதியா யுள்ளோங்கி நின்றபல வாணன்
திருவருளமுதை யூட்டியூட்டி யுள்ளொளி யாக்கித் தேக்கித்திரு
வருட்பாப்பாடெனத் திருவருளுதயமாகி யெடுத்தெடுத்துக் கொடுத்துத்
திருவருள்ஞானானுபவ முதலெலாந் திரட்டித் திரட்டிப் பாடியருளிய திரு. (அருட்பாவின்)
பத்தர்களெலாங் கூடியுருகியுருகிப் பாடிக்கனிந்து கனிந்து கனிந்துண்டாலும்
சித்தர்களெலாஞ் சேர்ந்து தெளிந்து தெளிந்து கண்டுகண் டுணர்ந்தாலும்
முத்தர்களெலாம் நாடிமுழுகிமுழுகிப் புணர்ந்தனைந் தறிந்தனுபவித் தாலுமருட்
சித்தனாரிடத்தினிற் றிருவம்பலவாணர்தம் பெருமையை யருள்செய்த திரு. (அருட்பாவின்)
ஜோதிரூபமாகி யதிலொரு வீதியை யுண்டாக்கி மூவாறுநிலையில்
ஆதியிலிருந்துவந்து வந்து மாயாசத்தி சத்திர்களிவரருளைக் குறைத்துவிரட்டப்
பாதிமதி யணிந்த திருப்பரமனருளாலே யப்படிகளையெலா மேறிச்
சோதித் துரியா தீதத்திற் சுகித்திருந்த வுண்மை யெலா மருளிச் செய்ததிரு. (அருட்பாவின்)
- பொன்னம்மாள் அம்மையார்.

No comments:

Post a Comment