Search This Blog

Wednesday, December 25, 2013

"திருஅருட்பா வரலாறு - 4" - வள்ளற் பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார்

தயவு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
"திருஅருட்பா வரலாறு" -
சன்மார்க்க சங்கச் சாதுக்களின் வேண்டுகோளின் படி
வள்ளற் பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் இயற்றப்பட்டு
"திருவருட்பிரகாச வள்ளற்பெருமானின்ஒப்புதலின் படி
திருஅருட்பா முதல் பதிப்பில் பதிப்பிக்கப்பட்டது "
 
உரை : வடலூர் . புலவர். சீனி. சட்டையப்பனார்
 
வெளியீடு :
வள்ளலார் இளைஞர் மன்றம் - கோட்டக்கரை - வடலூர்
வள்ளலார் குடில் - விருத்தாசலம். 
வள்ளலார் பெருவெளி இணையதளக் குழுவினர் - நியூ ஜெர்சி - அமெரிக்கா
 ======

(பக்குவம் அடைதல் வேண்டும்)

ஆருயிர்கள் வினைக்கீடாய் அவ்வவர்கட் கறிவொழுக்கஞ்
சீருறுதெய் வம்சமயம் சிக்கெனவே யாத்தருளால்
தேரும்ஒரு சிவன்பருவம் தோற்றுவதால் திருவருளை
ஓருமதல் லால்வேறென் உரைப்பதியாம் உயர்புலவீர்.   (31)

உரை:

உலகத்து உயிர்கள் நல்வினைத் தீவினைக்குத் தோன்றி ஈடாக வளர்கின்றன, அதன் காரணமாக அவர் அவர்களுக்கு அறிவுஒழுக்கம் அமைகின்றன, அதனால் சிறந்த தெய்வ வழிபாடும் மற்றும் சமய வழிபாடுகளை மக்கள் பின்பற்றி மேம்படத்திருவருள் வழிமுறை செய்துள்ளது.   

அவற்றின் மூலம் மெய்யறிவு விளங்கி அருளால் தெளிவு பெற எல்லாம் வல்ல இறைவனே பக்குவ காலத்தை உண்டாக்கிஅருளுகிறான்.   அத்தகைய அடியார்களின் பக்குவ காலம் நமக்கெல்லாம் எப்பொழுது நேருமோ என்று கருதுவதே அன்றி, பெரும்புலவராம் பெரு மக்களே! வேறு எவ்வாறு வள்ளலைப் பற்றிச் சொல்லி நிறைவு பெற முடியும்?












(துரும்பே கடவுளின் தொழில்களைச் செய்யும்)

எழுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

அமலனார்க் கீதோர் புகழ்கொலாம் ஆடல் அரியதில் கிளந்தனன் அறியேன்
நிமலசந் நிதிநேர் துரும்பொன்றே நேர்ந்த நேர்ச்சியில் அளவறு சித்திக்
கமம்உறு புத்தி முத்தியுற் றுயிர்கள் கனிவுற இதஞ்செயும் என்றால்
சமரச வேத சன்மார்க்க சங்கச் சாதுளார் பொறுப்பர்என் பிழையே.   (32)

உரை:

நால்வரின் அற்புதங்கள் வள்ளலாரின் அற்புதங்களே, சமயம், மதம், அவற்றின் தெய்வங்கள், நடைமுறைகள் யாவும்அருட்பிரகாசரின் திருவிளையாடல்களே, அப்படி யாம் சொல்லுவதால் மலம், மாயை அற்ற வள்ளலுக்கு அவை ஒருபுகழாகுமா?எண்ணிறந்த திருவிளையாடல்களை உடைய வள்ளல் பெருமானாரின் வாழ்வியலை அறியாதவனாகிய யான் சிலஅற்புதங்களை மட்டுமே எடுத்துச் சொல்லியுள்ளேன், இஃது ஒரு பெருமை அன்று,

புனிதமாகிய வள்ளல் பெருமானின் திருச் சமூகத்தைச் சிறிய துரும்பு ஒன்று சென்று அடைகின்றது, அந்த எளிய நிகழ்ச்சிஒன்றினால் அத்துரும்பு சொல்ல ஒண்ணாச் சித்திகளைப் பெருகின்றது, அருள் ஆற்றலை உடைய புத்தியைப் பெருகிறது, அத்துடன் உண்மை நல்முத்தியைப் பெருகின்றது, அவ்வாறு தான் பெற்றுக் கொண்டதோடு மட்டும் அன்றிப் பிற உயிர்களும்அவ்வாறு அடையும்படி முறை மாறாத கருணை பாலிக்கும் செயலையும் செய்கின்றது

இவ்வாறு திருஅருட்பிரகாசப் பெருமானின் திருவருட் சமூகப் பெருமையை அடக்கம் சிறிதுமின்றி உண்மையைவெளிப்படையாக எடுத்து யான் சொன்னதற்கு, சமரச வேத சன்மார்க்க சங்கத்து சாதுக்களாகிய உள்ளவர்கள் அடியேன்பிழையைப் பொறுத்தருளுதல் வேண்டும்.   



(திருஅருட் செயல்)
தரவுக் கொச்சகக் கலிப்பா

எந்தைஅருட் பிரகாசன் இன்உயிர்கள் தமைத்தேற்றச்
சந்தமுற இனம்ஆடுந் தண்ணருள்ஆ டலைப்போற்றச்
சுந்தரநல் அருள்எடுத்துக் கைதருமேற் தோழுதிறைஞ்சிப்
பந்தவினைத் தொடங்குமயற் படரும்அற மொழிந்துய்வேன்.   (33)

உரை:

அருட் தந்தையாகும் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான், மானுட உயிர்க்குலம், பாடிப் பணியும் நெறி முறையில்மேம்படுவதற்கு எண்ணம் கொண்டார்கள்.   அதன் காரணமாகச் செம்பொருளும் தமிழிசையும் கலந்திடும் தண்ணருள் நிறைந்ததிருஅருட் பாடல்களை எழுதிடலானார்கள், அப்படி அவ்வப்போது திருவருள் வள்ளல் பெருமானாரைப் பாடி அருளும்படிஉள்ளகத்திலிருந்து ஊக்கப்படுத்தியருளியது.   

அவ்வாறு உரைத்த திருஅருட்பா பாடல்களை யானும் வணங்குதல் செய்வேன்! வாழ்த்துதல் செய்வேன்! எனது தீவினைக்கட்டுகள், மல, மாயை அலைவுகள் நீங்கும்படி அத்திருவருட் பாடல்களைப் பாடிப்பாடி மேம்படுகின்றவன் ஆவேன், அவ்வாறுசெய்தலன்றி வேறு என்ன என்போன்றவரால் செய்ய இயலும்?









(தமிழ் அமுத வெள்ளம்)

ஆயஅருள் இறைஎங்கள் அருட்பிரகாசப் பெருமான்
தூயஅரு ளால்பொழிந்த சொல்அமிழ்தாம் தமிழ்ப்பெருக்கு
நேயஅருட் பற்றாகி நிறைமனத்துப் பெரியர்க்கும்
மாயமயக் குழல்என்போன் மறவர்க்கு உள்ளுறுக்கி.   (34)

உரை:

அருட்பெருஞ்ஜோதியராம் நம் அருட்பிரகாசரின் திருவாய் மொழியால் மலர்ந்தருளப் பெற்றதே திருஅருட்பாவாகிய தமிழ்அமுத வெள்ளம்,

திருஅருட்பாவாகிய தமிழ் அமுத வெள்ளம், மனித நேயமும் உயிர் நேயமும் பழகுவதற்குப் பற்றுக் கோடாகி விளங்குகிறது, மற்றும் காம வெகுளி, மயக்கங்களை நீக்கிய நிறை உள்ளத்து பெரியோர்களுக்கும், உயிரையும் உள்ளத்தையும் உருக்கும்உணர்வுடையதாகின்றது.   அவ்வளவோ! மாயை வாழ்வியலும் மயக்க அறிவு நிலையிலும் சுழலுகின்ற என் போன்றவன்முறையாளர்களுக்கும் கூட உள்ளத்தை உருக்கித் தருகின்றது.   












(திருஅருட்பா திருப்பெயர்)

அளவாத பேரன்பு சொரிந்தருளை விளைவித்துத்
தளவாகும் நகைக்கயற்கண் தையல்இடங் கொண்டபிரான்
வளமாகும் கழன்மலரோ டிரண்டறுத்து வாழ்விக்கும்
உளவாலே அருட்பாஎன்றோரு நாமம் பூண்டதுவே.   (35)

உரை:

அளவிட முடியாத பேரன்பினைப் பொழிகின்றது திருஅருட்பா.   அதனால் திருவருள் பயிரினை விளைவித்துத் தருகின்றது, முத்துப்போன்ற புன்னகை உடையவளும், கயல்மீன் போன்ற அருட்கண்களை உடையவளும் ஆகிய உமை அம்மையைஇடப்பாகத்தே கொண்ட சிவபரம் பொருளின் பேரின்ப வளம் நிறைந்த திருவடி மலர்களோடு (ஆன்மா என்னும் ஆண்டவன்என்னும்) பேதம் நீக்கி ஒன்று படுத்தி அருள்கின்றது.   

அத்தகைய அருள் வாழ்வினை வழங்கும் உளவால் திருஅருட்பா என்றதொரு திருப்பெயரை வள்ளல் பெருமானின் பாடல்கள்இயல்பாகவே தரித்துக் கொண்டன.   












(திருஅருட்பா என்பதன் பொருள்)

மருளாலே சிலர்என்போன் மருளாலே மயங்கிஉணர்ந்
தருளாலே உரைத்ததென அருட்பாவின் உரைகொண்டார்
தெருளாதேன் சிந்தைதனைத் தெளிவித்துச் சிவம்ஆக்கும்
அருளாலே உரைத்ததென அருட்பாவின் உரைகொண்டாம்.   (36)

உரை:

இறைவனின் திருஅருளால் பாடப் பெற்றதால் திருஅருட்பா என்னும் பெயர் பெற்றது என்னும் பொருள் கொண்டார் மயக்கஅறிவுடையோர் சிலர், அவர்தம் அறிவும் உணர்வும் மயக்கம் அடைந்தமையால் தான், அவ்வாறு பொருள் கொள்ளமுற்பட்டுவிட்டனர்.   அந்தோ!

பக்குவம் அடையாதவருடைய உள்ளம்தனை தெளிவித்து உடல், உள்ளம், உயிர் ஆகியவற்றையும் சிவபரம்பொருளாகவேஆக்கும், அருள் ஆற்றல் உடைமையாலே பாடப்பெற்றதே "திருஅருட்பா" - என் யாம் பொருள் கொண்டுள்ளோம்.   














(தோத்திரமும் சாத்திரமும் திருஅருட்பாவே)

அத்தகைய திருஅருட்பா உபாசனைலீ லைகண்முறைமை
உய்த்தறியச் சோத்தமொடு சாத்திரமா உறுதலினால்
சுத்தமுற எப்பொருளும் விளக்கெழுவாய்த் தொல்எழுத்தை
வைத்தஎழுத் தைந்தின் உண்மை மலர்விக்கும் வாய்மையினால்.   (37)

உரை:

திருஅருட்பா தோத்திர நூலாகவும் விளங்குகின்றது மற்றும் சாத்திர நூலாகவும் விளங்குகின்றது,

வேத நூல்களால் கூறப்படுகின்ற உபாசனா காண்ட முறைகளையும் (கடவுளை வழிபடும் முறைகள்), ஞானக் காண்டமுறைகளையும் உணர்ந்து அறிவதற்குத் திருஅருட்பாவின் சாத்திரத் தன்மையும் தோத்திரத் தன்மையும் உதவி புரிகின்றன.   

உலகில் பிறவி ஏற்றுக்கொண்ட ஆன்மா ஒன்று சுத்த தேகத்தோடு கடவுளோடு ஒன்றுபடும் தகுதியைப் படிப்படியாக, திருமுறைதிருமுறையாக, விளக்கும் உண்மை நிலைகொண்டது திருஅருட்பா, எல்லாப் பொருளையும் விளக்கும் தகுதி உடையது, தலைமையாகும் எழுவாய் எழுத்துக்களாய் அமைந்ததும், தொன்மைத் தகுதி உடையதுமான அ, இ, உ, எ, ஒ (அல்லது சிவயநம)என்னும் ஐந்து எழுத்துகளின் பொருட்பயனை உள்ளபடியே உண்டாக்கித் தரும் பெருமை உடையது திருஅருட்பா.   







(திருமுறைகள் ஆறு)

அறுசமயத் துள்ளாரும் அயலாரும் அவர்அறியப்
பெறுபொருளும் அளவாத பெரும்பொருளுங் காட்டலினால்
உறுதிபெறும் அத்துவா அதன்மேலாய் உறுபொருளை
மறுவறக்காட் டுகையாலு மற்றாறு முறையாக.   (38)

உரை:

பைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் என்னும் ஆறுவகை அகச் சமயங்களைப் பின்பற்றுபவர்களும், அச்சமயத்திற்குப் புறம்பான பெளத்தம், சமணம், உலகாயதம், மீமாம்சம், மாயாவாதம், பஞ்சராத்திரம் என்னும் புறச்சமயங்களைப் பின்பற்றுபவர்களும்,

இவையே அல்லாத கிருஸ்துவம், முகமதியம் என்னும் சமயங்களைப் பின்பற்றுபவர்களும், உணர்ந்து அறியப் பெருகின்றமெய்பொருள் தன்மையையும் எடுத்துக்காட்டி நிற்பது திருஅருட்பா.   

ஆன்ம சாதனத்திற்கு உறுதியாகப் பழகும் மந்திரம், கலை, பதம், எழுத்து, தத்துவம், புவனம், முதலிய பொருட்சிறப்புகளையும்அதற்கு அப்பால் விளங்கும் பெரும் பொருட் சிறப்புகளையும், குற்றம் குறை இல்லாமல் அனுபவித்து மேம்பட விளக்கிக்காட்டுவதால் ஆறுதிருமுறைகளாகத் திருஅருட்பா அமையப்பெற்றது.   









(பிரிவும் பிரியாமையும்)

பிரிந்துபிரி யாதருளின் பெற்றிமிக்குப் பிணக்கறுமா
தெரிந்துமுறை செய்தருளுஞ் சிறப்பானே திருஅருட்பா
விரிந்துமுறை ஆறெனவே மெய்யருளின் தொடர்பாட்டால்
பரிந்தன்பர் உலகமெலாம் பழிச்சிபுகழ் நிலவியதே.   (39)

உரை:

திருஅருட்பா ஆறு திருமுறைகளாகப் பிரிந்துள்ளது, ஆனாலும் அருட்பாங்கினால் பிரியாத ஒரே அருள் நூலாகி விளங்குகின்றது!முதல் திருமுறை தொடங்கி ஆறுதிருமுறை அளவும் அருள் நெறியின் வளர்ச்சியினையும் நிறைவினையும் ஒவ்வொருதிருமுறையும் முறையே படிப்படியாகத் தெரிவிக்கின்றது.   அதன் காரணமாகத்தான் திருமுறைகளின் மாறுபாடு இல்லாததும், பயன்பாட்டுச் சிறப்பினால் ஒன்றுபட்டு உயர்ந்து அருள்வதும் ஆகிய தகுதியினால் ஆறு திருமுறைகளாக வள்ளல் பெருமான்திருவாய் மலர்ந்தருளினார்கள்,

ஆதலின் திருஅருட்பாவின் அருள் ஓங்கும் திருமுறைகள் ஆறாகவே ஆயிற்று.   அருள் நிலையின் உண்மை மேம்பாட்டினைஅடைய விரும்புகின்ற அன்பர்கள் எல்லாம் உணர்ந்து பரிவுடன் போற்றுகின்றனர், உலக மக்கள் எல்லாம் வாழ்த்திவணங்குகின்றனர், இவ்வாறாகத் திருஅருட்பாவின் புகழ் எங்கும் பரவி விளங்கலாயிற்று.   









(ஐந்து திருமுறைகள்)

பண்ணிறந்த தமிழ்வேதப் பழம்பனுவல் தொகையஅதன்சீர்
எண்ணிறந்து நின்றனபோல் எண்ணிறந்த தாங்கவற்றுள்
உண்ணிறைந்த கருணையினால் உயிர்க்குறுதி பயப்பமுனங்
கண்ணிறைந்த சுவைமருந்தாம் ஐந்துமுறை கண்டமட்டில்.   (40)

உரை:

தெய்வப் பண் இசைத் தகுதி பெற்ற தேவார, திருவாசகப் பழம் பாடல்கள் தொகையும், வகையும் விரிவும் கணக்கற்றிருந்தன, அவ்வாறே வள்ளல் பெருமானும் பாடிய திருஅருட்பா பாடல்கள் எண்ணிக்கை அற்றிருந்தன.   

அளவு கடந்த அத்தகைய திருஅருட்பா பாடல்களுள், உயிர் கூட்டத்திற்குப் பயனாகி நிலை பேற்றினைத் தருவனவற்றைமட்டும் தொகுக்கும் படி திருவருள் ஆணை கிட்டியது.   அருட்சுவை மருந்தாக, பாடிபணிந்து மகிழ்வதற்குத் தகுதியாக, ஐந்துதிருமுறைகளுக்கு உரிய பாடல்களை மட்டும் தொகுக்கும்படி திருவருள் ஆணை செய்தது.   
  





No comments:

Post a Comment