Search This Blog

Friday, August 18, 2017

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "அற்பித்த விண்ணப்பம்"

10. அற்பித்த விண்ணப்பம்

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

தண்ணார் கொன்றையினாய் தமிழ் மெய்ப்பய னானவனே
அண்ணா வாருயிரே அணி மன்றவ ஆரழல்போல்
வண்ணா வானமுதே வட லூருறை மாணிக்கமே
எண்ணா யேழைகுற்றம் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே (1)

சேலா டும்விழியா ளவள் செய்தவங் காணவன்று
நூலார் மார்பினனாய் நுணு கும்நடை கொண்டவனே
மாலோ டயனறியா வட லூருறை மாணிக்கமே
ஏலாய் ஏழைகுற்றம் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே (2)

கந்தா கற்பகமே கடை யேனிரு கண்மணியே
நந்தா மணிவிளக்கே நாயி னேனைப்பொ ருட்படுத்து
வந்தாய் மானிடனாய் வட லூருறை மாணிக்கமே
எந்தாய் குற்றமெண்ணேல் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே (3)

தாயே தத்துவனே தந்தை யேயெந் தயாநிதியே
சேயே செழுந்துணையே சிவ னேசிவ லோகத்தனே
மாயா மாயம்வல்லாய் வட லூருறை மாணிக்கமே
ஏயே ஏழைகுற்றம் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே (4)

குருவே கோமளமார் கொடி யேரிடைக் கொம்பனையாள்
திருவே தெள்ளமிழ்தே சிறி யேனுளச் செய்யமலர்
மருவே மன்றுடையாய் வட லூருறை மாணிக்கமே
யிருவே றெண்ணலெந்தா யெம் பிரானென்னை ஏன்றுகொள்ளே. (5)

கொடியே னெஞ்சகமே கோயில் கொண்ட குருமணியே
படிமே லொன் றுமிலாப் பாவி யேனைப் பொருட்படுத்து
வடிவோர் மானிடனாம் வட லூருறை மாணிக்கமே
அடிகேள் குற்றமெண்ணேல் அம்மா னென்னை ஏன்றுகொள்ளே. (6)

ஊழ்மா முளையமுதம் உண்ட வெம்முடை உத்தமனே
பாழ்மா மையலுறா வகை யிற்பரிந் தாண்டுகொண்ட
வாழ்வே மாமணியே வட லூருறை மாணிக்கமே
ஏழா யென்னவெள்ளேல் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே. (7)

ஊனாய் உயிரானாய் ஒளிர் ஞாயிறு தண்மதியம்
வானாய் தீநிலனீர் வளி யான மரகதமே
மானார் கண்ணிபங்கா வட லூருறை மாணிக்கமே
ஆனா ஆரமுதே யடி யேனையும் ஏன்றுகொள்ளே. (8)

ஆல நறுநிழலும் அணி தண்குருந் தின்னிழலும்
போலவென் புன்றலைமேற் புனை வித்தபொ லங்கழலாய்
மாலவோர் மானிடனாம் வட லூருறை மாணிக்கமே
யேலக் குழலிபங்கா வெம் பிரானென்னை ஏன்றுகொள்ளே. (9)

போதே போக்குகின்றேன் அவமேவெறும் புன்மைகளால்
ஏதே செயக்கடவேன் இனி யேதுவிலே னுயுமா
வாதே துள்ளுளவென் வட லூருறை மாணிக்கமே
யீதோ கருணையெந்தாய் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே. (10)


அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

No comments:

Post a Comment